வெள்ளி, 19 செப்டம்பர், 2008

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா!

இன்றைய அரசியல் தலைவர்களுக்காகத்தான் இந்தத் தலைப்பு.

இது எனது கேள்வியும் கூட.

மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார் இவர்களுக்கிடையேயான ஆழமான நட்பு பற்றி நிறைய படித்துள்ளேன். பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா இவர்கள் இருவருக்கும், அரசியல் வாழ்க்கையைத் தாண்டி, ஒருவர் மீது ஒருவருக்கு பரஸ்பர மதிப்பும் மரியாதையும் இருந்தது.

ஆனால், இன்றோ வயதுக்கு மரியாதை தராமல் பெயர் சொல்லி தரக்குறைவாக விமர்சனம் செய்வதும், மூத்த தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பொது மேடையில் அசிங்கப்படுத்துவதும் சர்வ சாதாரனமாக போய்விட்டது.

நேற்றைய தினமலர் நாளிதழில் படத்துடன் ஒரு செய்தியைப் பார்த்தேன். நடிகர் சத்தியராஜின் மகன் சிபியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நமது உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களும், அதிமுக எம்.எல்.ஏ. வும் , நடிகருமான திரு எஸ்.வி. சேகரும் மிகவும் நெருக்கமுடன் கட்டித் தழுவியபடி மலர்ந்த முகத்தோடு இருந்த அந்தப் படத்தை பார்த்த போதுதான், இடையே காணாமல் போயிருந்த அந்த அரசியல் வாழ்க்கையை மீறிய நட்பு, இன்றைய தலைமுறை அரசியல்வாதிகளான இவர்களுக்குள் துளிர்விடுவதை காண முடிந்தது!

இன்னும் சொல்லப் போனால், இன்றைய முதல்வர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அவர்களின் மேல் அன்றைய முதல்வர் திரு எம்ஜியார் அவர்கள் வைத்திருந்த ஆழமான நாற்பது ஆண்டு கால நட்பு பற்றி நம் எல்லோருமே அறிவோம்! தனது கடைசி காலத்தில், தான் உருவாக்கிய கட்சியை மீண்டும் திமுகவுடன் இணைத்துவிட அவர் மிகவும் விருப்பப் பட்டார் என்பதிலிருந்தே, அவர் எந்த அளவு கலைஞரை நேசித்திருக்க வேண்டும் என்பது புரிகிறதல்லவா.

அரசியல் வேண்டும்தான். ஆனால் அதுவே காழ்புனற்சியாக மாறிவிடக் கூடாது. தனி ஒருவரைத் துதி பாடுவதோ அல்லது ஒருவரின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்கையைப் பற்றி விமர்சனம் செய்வதோ கூடாது.

தமிழ்ச் சமுதாயம் முன்னேற வேண்டுமானால், அரசியல் நாகரீகம் நிச்சயம் தேவை. இன்றைய தலைவர்கள் திருந்துவார்களா?

எல்லோரும் ராஜாஜி, காமராஜர் ஆக முடியுமா? கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?

ஆம். கல்லெல்லாம் மாணிக்க கல்லாகவே இருக்கட்டும். நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும்!

அன்புடன்,

கண்ண நேசன்.

நன்னிலம்.

வியாழன், 18 செப்டம்பர், 2008

எழுதுவதென்பது ஒரு தனி சுகம்!

பேசுவதைக் காட்டிலும் எழுதுவதென்பது எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எனக்குத் தெரிந்து, எனது பத்தாம் வகுப்பு விடுமுறையின் போது கவிஞர் கண்ணதாசனின் கவிதைகளில் மிகவும் பைத்தியமானேன்.

அந்த இரண்டு மாத கால விடுமுறையில், கவிஞரின் "எனது வசந்த காலங்கள்" முதற்கொண்டு "அர்த்தமுள்ள இந்துமதம்" வரை அனைத்து படைப்புகளையும் படித்து முடித்தேன். விளைவு! "கண்டது கற்கப் பண்டிதனானேன்!

தமிழன்னையின் மடியில் நானும் ஒரு கவிஞனாகப் பிறந்தேன். எனது முதல் கவிதையை நான் எழுதி முடிதபோது, அடடா... அந்த சுகத்தை என்ன சொல்ல !
அதை இப்போது வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது!

மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன? ஆம்! எனது தாயும், தந்தையுமே தமிழாசிரியர்கள்தானே. தமிழ் எனக்குக் கவிதையாக வந்ததில் எனது பாரம்பர்யமும் ஒரு காரணம்!

வட மொழியிலும் ஒரு பாடல் எழுதியுள்ளேன். இத்தனைக்கும் எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. கேள்வி ஞானம் என்பார்களே அதுதான். என் வீடடுக்கு எதிர் வீட்டில் ஸ்ரீ. சேதுராம தீக்ஷிதர் என்ற ஒரு சம்ஸ்க்ருத பண்டிதர் இருந்தார். அவர் மற்றவர்களுக்கு சொல்லித் தருவதை நான் எனது வீட்டுத் திண்ணையில் இருந்தபடியே கேட்டுக் கொண்டிருப்பேன். சம்ஸ்க்ருதம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு மொழியாகும்.

எனது சுய சரிதத்தை பிறகு சொல்கிறேன். எனது வாழ்க்கை நிறைய அனுபவங்களை கொண்ட ஒரு அருமையான புத்தகமாகும்.

இனி, தினமும் உங்களுடன் என் மனதில் பட்ட விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.

அன்புடன்,
கண்ண நேசன்,
நன்னிலம்.




புதன், 17 செப்டம்பர், 2008

இதுதான் எனது தர்பார் மண்டபம்!

வணக்கம்! வாழிய நலம்!

கண்ண நேசனாகிய நான், இந்த எனது வலைப் பதிவின் மூலம், உங்கள் அனைவருக்கும் சொல்லும் முதல் வணக்கம்!

இயந்திர மயமான இன்றைய வாழ்க்கை முறையில், ஒவ்வொரு மனித மனதுக்குள்ளாகவும் எத்தனை எத்தனையோ பாரங்கள்...பாதிப்புகள்... எத்தனை எத்தனையோ சந்தோஷங்கள்... மகிழ்ச்சி ஆரவாரங்கள்...

சந்தோஷங்களைக் கொண்டாடுகிற மனித மனம், சுமைகளில் சுருங்கிப் போகிறது. ஆம்! சுமைகளும், துக்கமும்தான் மனிதனை மிக அதிகமாகப் பாதிக்கின்றன... பாடமும் கற்பிக்கின்றன!

இவைகளில், மனிதன் தானாக ஏற்படுத்திக் கொள்ளும் சுமைகளைக் காட்டிலும், அவனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளால் அவனுக்கு ஏற்படும் பாதிப்புகளே மிகவும் அதிகம்.

பாதிப்புகளும்... அவற்றால் ஏற்படும் பாரங்களும் நமது அன்றாட வாழ்க்கையிலேதான் அரங்கேறுகின்றன.

நட்புடன் பழகியபடியே நமக்கும் தெரியாமல் நாரத வேலை செய்யும் நயவஞ்சகர்களையும்...

அன்பு காட்டிஆதரிப்பது போல் அரவணைத்து, அன்பின் ஆணிவேரையே அறுக்கத் திட்டமிடும் அரக்க மனத்தவர்களையும்...

பொது நலமே தன் வாழ்கை என்று பொழுதெல்லாம் உழைப்பது போல் போக்கு காட்டி, எதுவெல்லாம் கைப்பற்ற ஏதுவாக இருக்கிறதோ அதுவெல்லாம் கைப்பற்றி... களவாடி... தனக்குத் தனக்கென்று சுயநலம் ஒன்றையே தன் சுய ரூபமாகக் கொண்டு சொந்தத் தாய் நாட்டையே சுரண்ட எத்தனிப்பவர்களையும்...

மண்டை பிளக்க மதவாதம் பேசி, சண்டை மூட்டிவிட்டு சாந்தம் அதை உருக்குலைத்து, கந்தக வெடிச் சத்தத்தால் கருகிய மனித நேயத்தின் சாம்பல் குவியல்களில் சந்தோஷிக்கும் சாடிச மிருகங்களையும்...

தினம் தினம்... ஏதோ ஒரு நிகழ்வின் வாயிலாக நாம் பார்த்தும்... கேட்டும்...படித்தும் கொண்டுள்ளோம்...

சமுதாய உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் இவை குறித்த தனது சுய மதிப்பீடுகளை... கருத்துக்களை எடுத்தியம்ப வேண்டுமென்ற ஆர்வம் நிச்சயமாக இருக்கும்.

அந்த வகையில், பொறுப்புணர்வுள்ள ஒரு இந்தியப் பிரஜையாக... இந்த வலைப் பதிவில் எனது எண்ணங்களை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.

இந்த வலைப் பதிவு, எனது பரந்து விரிந்த சாம்ராஜ்ஜியத்தின் படோடாபம் மிகுந்து காணப்படும் பளிங்கு தர்பார் மண்டபம் ஆகும்!

அன்றாட நிகழ்வில் தொடங்கி... கலை, கவிதை, அரசியல், சினிமா, விளையாட்டு, ஆன்மிகம், பகுத்தறிவு வாதம், இயற்கை சீற்றங்கள் என எதுவெல்லாம் என் எண்ணங்களை எழுதத் தூண்டுகிறதோ... அத்தனை பற்றியும் எழுதப் போகிறேன்.

நாளைய தர்பாரில் சந்திக்கலாம்...

அன்புடன்,

கண்ண நேசன்.

நன்னிலம்.