செவ்வாய், 28 அக்டோபர், 2008

இந்த வருட தீபாவளி [27.10.2008]

வணக்கம்! வாழிய நலம்!
நேற்று தீபாவளியைக் கொண்டாடி விட்டு, நீண்ட இடை வெளிக்குப் பிறகு இன்று உங்களைச் சந்திக்கிறேன்.

எனது இளம் வயதில் தீபாவளியைக் கொண்டாடும்போது எப்படி குதூகலித்துக் களித்தேனோ, அப்படிப் பட்ட மன நிலையை எனக்கு இந்த தீபாவளி கொடுத்தது.
ஏனெனில், என் வாழ்க்கையின் சில முக்கிய நிகழ்வுகள் இந்த தீபாவளியை ஒட்டியே நிகழ்ந்தன.

அனைத்தும் நல்ல படியாக, எதிர்பார்த்ததற்கும் மேலாக நடந்து முடிந்ததில் மனதுக்கு ஒரு திருப்தி. மனித மனத்தின் விசித்திரமான போக்கே இதுதான்!

அதிகாலை எழுந்து, மங்கள இசையைக் கேட்டுக் கொண்டே சுவாமி படங்களை அலங்கரித்து, புது துணிமணிகளை மஞ்சள் குங்குமம் இட்டு தாம்பாளத்தில் வைத்து வணங்கி, புத்தாடை அணிந்து, என் மனைவி உமா, மகள் மயூரி இவர்களுடன் பட்டாசு வெடித்து மிகவும் சந்தோஷமாக இந்த தீபாவளியைக் கொண்டாடினேன்!

பண்டிகை என்பதே, ஏற்றத் தாழ்வுள்ள மனித வாழ்க்கையில் ஒரு உற்சாகத்தைக் கொடுப்பதற்க்காக நம் முன்னோர்களால் உண்டாக்கப்பட்டதுதானே!

அன்றாடப் பணிகளிலிருந்து மனத்தையும் சிந்தனையையும் மாற்றி, உறவுகளோடு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டு, விட்டுப் போன உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டு மிகவும் சந்தோஷமாக பண்டிகை நாட்களை கொண்டாட வேண்டும்! அப்போதுதான் உண்மையான சந்தோஷசம் கிடைக்கும்!

என்னைப் பொறுத்தவரை, பண்டிகைகளைக் கொண்டாட அலுப்புப் படுகிற மனிதர்கள் மனிதர்களே அல்ல; அவர்கள் காட்டுமிராண்டிகள். கொண்டாடாததற்கு அவர்கள் என்ன வியாக்கியானம் சொன்னாலும் சரி; என் வரையில் அவர்கள் காட்டுமிராண்டிகள்தான்!

பண்டிகைகள் செலவு வைப்பதற்க்காக அல்ல; சந்தோஷங்களை செலவிடுவதற்காக!

இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ? குடும்பத்தினரோடு மகிழ்ச்சியை அனுபவியுங்கள்; ஆனந்தமாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்! நம் உள்ளும், புறமும் மகிழ்ச்சிக் களிப்பில் இருக்கும் போது இந்த உலகும் ஆனந்தமாக இருக்கும்!

பிரச்சினைகள் பிறப்பெடுத்த எல்லோருக்கும் இருக்கும்தான்; அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷத்தின் பாதையில் பயணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!

அன்புடன்,
கண்ண நேசன்,
நன்னிலம்.