வெள்ளி, 27 ஜனவரி, 2012

ப்ரும்மஸ்ரீ ரமணி அண்ணா!

வாழிய நாடு! வளர்க செந்தமிழ்!அனைவருக்கும் எமது அன்பு வணக்கங்கள்!"எந்தரோ மகானுபாவலு; அன்தரீகி வந்தனமு" - என்று ஸ்ரீ தியாகப்ப்ரும்மம் மனமுருகி பாடி வணங்கியதைப் போல... பார்த்த மாத்திரத்தில் வணங்கத் தோன்றும் கம்பீரமான தோற்றம்!

மஞ்சள் ஒளிக் கீற்றை நெடிய வானில் பரப்பி, அந்த ஒளிக் கீற்றில் அமிழ்ந்து, காணும் கண்களின் ஊடே ஊடுருவி... மனதிற்கு ஆனந்தம் கொடுக்கின்ற மாலை நேரத்து சிகப்பு சூரியனைப் போல... பரந்து விரிந்த நெற்றியில் சந்தனக் கீற்றுகளோடும், அதன் நடுவில் அனைவரையும் ஆகர்ஷிக்கும் பெரிய குங்குமப் பொட்டும் துலங்க... கனிவுடன் கூடியதொரு கூர்மையான பார்வையும்... சிரித்த முகமும், செம்மையான ஞானமும், நிறைத்த குடமென, நெடிதுயர்ந்த உருவமும்...விரித்த பேச்செல்லாம் வீண் பேச்சாக அல்லாமல், செரிக்க சொற்சிலம்பாடும் சிம்மக் கர்ச்சனையும்... கையில் கங்கணமும், பணிந்தவரின் ஊழ்வினையை நையப் புடைத்து நலம் விளைக்கும் கைத்தடியும்... குருவின் அருகாமை குளிர் தரு நிழலாகும், குலம் தழைக்க உரமாகும் என்பதை நிதர்சனமாக உணர வைக்கும் அந்த அன்பும், கனிவும்... பிரம்மஸ்ரீ ரமணி அண்ணாவின் அருகாமையை உணர்ந்த ஒரு சில ஆத்மாக்களுக்கு மட்டுமே கிடைத்த ஒரு மஹா பாக்கியம் என்று கூடச் சொல்லலாம்!

இந்த கட்டுரையை மே இரண்டாம் நாள் எழுதத் தொடங்கி இன்றைய நாளில் நான் முடிப்பதற்கும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில், பிரம்மஸ்ரீ ரமணி அண்ணாவின் இமாலய சாதனைகளில் ஒன்றை மட்டுமே, அதாவது நங்கநல்லூரில் அவர் கட்டியுள்ள அந்த ஒரு கோவிலை மட்டுமே நான் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றிருந்தேன்.

ஆனால் மே மாதத்தின் இறுதியில் நான் எனது குடும்பத்துடன் சொந்த ஊரான நன்னிலதுக்கு செல்லும்போது திண்டிவனம் - பாண்டிச்சேரி வழியில் பிரம்மஸ்ரீ ரமணி அண்ணாவின் இரண்டாவது சாதனையான பஞ்சவடி ஷேத்திரத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயரை கண்குளிரக் காணும் பெரும் பாக்கியம் கிட்டியது. அதுவும் பிரம்மஸ்ரீ அண்ணா அவர்களின் ஆசியால்தான்!

அந்த சன்னதியில் நின்று தரிசிக்கும் அந்த உணர்ச்சிமயமான நிமிடங்களில்...அந்த ஆலயத்தின் கம்பீரமான அழகில்...அங்கு வந்து ஸ்ரீ ஆஞ்சனேயரிடம் தனது மனக்குறையை சொல்லிவிட்டு நிம்மதியுடன் திரும்பிப்போகும் மனிதர்களின் முகங்களையும் பார்க்கும் போதுதான், உண்மையிலேயே, பிரம்மஸ்ரீ ரமணி அண்ணாவைப் பற்றி எழுதும் அருகதை எனக்குக் கிட்டியிருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை உணர முடிந்தது!

மகாகவி காளிதாசுக்கு, ஸ்ரீ சரஸ்வதி தேவியின் கிருபா கடாட்சம் கிடைத்தபோது அவன் எந்த மனநிலையில் இருந்தானோ அதே மன நிலையில் நான் அன்று இருந்தேன்! அஞ்சனா மைந்தன், ஆபத்பாந்தவன், ஸ்ரீ சீதாராமசந்திர மூர்த்தியின் இன்னருளுக்குப் பாதிரமானவனான ஸ்ரீ ஆஞ்சநேய மகாப் பிரபுவே இன்று பிரம்ம ஸ்ரீ ரமணி அண்ணா மூலமாக எனக்கு நல்லருள் புரிவதாகப் பட்டது!

சரித்திர கால பேரரசர்கள் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட ஆலயங்களைக் கட்டி முடிக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தார்கள்! அந்த வகையில் நமது ஸ்ரீ அண்ணா அவர்கள் அந்தப் பேரரசர்களின் வரிசையில் நாம் நினைவு கூறத் தக்க வல்லமையைப் பெற்றுள்ளார்கள்! அன்னாருடைய இந்த இமாலய சாதனை, ஆன்மீகத்தின்பால் ஈடுபாடு கொண்டுள்ள அனைவராலும் போற்றப் பட வேண்டிய ஒன்றாகும்! என்ன ஒரு கலை நயம்! அப்படி ஒரு பிரம்மாண்டம்!

சக்தி விகடனில் படித்ததாக ஓர் ஞாபகம்... இக் கோவிலின் கும்பாபிஷேகத்தின் போது ஸ்ரீ ரமணி அண்ணா அவர்கள் எத்தனையோ கிலோ எடையுள்ள பிரமாண்டமான லட்டு ஒன்றை செய்து பிரசாதமாக வழங்கினார்கள் என்று!நான் நினைக்கிறேன்... பிரமாண்டத்தின் மறுபெயர்தான் பிரம்ம ஸ்ரீ ரமணி அண்ணாவோ!இந்த பிரம்மாண்டமான இரு ஆலயங்களைக் கட்டி முடிக்க, ஸ்ரீ அண்ணாவின் உழைப்பு எந்த அளவு இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே நமக்கு பிரமிப்பாக இருக்கிறது!

வீட்டிற்கு காம்பவுண்டு சுவர் எடுக்கவே பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ள இந்தக் காலத்தில் அவருடைய இமாலய சாதனைக்கு நாமெல்லோருமே சிரம் தாழ்த்தி வணங்க வேண்டும்!அன்னாருக்கு ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தி நல்ல ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தருமாறு எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகிறேன்.நன்றி! வணக்கம்!

அன்புடன்,
கண்ணநேசன்